தக்காளி விலை விலையேற்றம் காரணமாக தமிழக அரசு அண்மையில் நியாயவிலைக் கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய முடிவு எடுத்திருந்தது. இந்த நிலையில் 300 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனையை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் உழவர் சந்தைகளில் தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்டவற்றை அதிக அளவில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவை குறைவான விலையில் விற்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும், விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களை பதுக்குதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.