Skip to main content

“மாதக் கடைசியில் வெறுங்கையுடன் வீடு திரும்பும் ஆசிரியர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்” - எடப்பாடி பழனிசாமி

Published on 03/10/2024 | Edited on 03/10/2024
 Salary for teachers should be paid without stopping says Edappadi Palaniswami

“செம்மையான பணியினை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் தங்களது பணியினை  மாதம் முழுவதும் செய்துவிட்டு, மாதக் கடைசியில் வெறுங்கையுடன் வீடு திரும்பும்பொழுது மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்” என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி பள்ளிக் கல்வித்துறைக்கு வரவில்லை என்ற காரணம் கூறி நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் என்று சுமார் 32,500 பேருக்குச் செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. 

தமிழகத்தின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கக்கூடிய செம்மையான பணியினை மேற்கொள்பவர்கள் ஆசிரியர் சமுதாயத்தினர். அப்படிப்பட்ட மேன்மையான பணியினை மாதம் முழுவதும் செய்துவிட்டு, மாதக் கடைசியில் அதற்கு உண்டான ஊதியத்தை வாங்காமல் வெறுங்கையுடன் வீடு திரும்பும்பொழுது வீட்டு வாடகை, குடும்பச் செலவுகள், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துதல் என்று பணத்தைக் கட்டமுடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் ஆசிரியர் பெருமக்கள்.

தனியார் நடத்திய கார் பந்தயத்திற்குக் கோடிக்கணக்கான ரூபாயைச் செலவு செய்த முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசு, மத்திய அரசு நிதி வரவில்லை என்ற காரணம் கூறி ஆசிரியர்களுக்குச் சென்ற மாதத்திற்கான சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, மாநில அரசின் நிதியிலிருந்து சுமார் 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும், இனி மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாது வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்