நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை, அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக, நேற்று தகவல் வெளியான நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது சொந்த விருப்பத்தில் விஜய் மக்கள் இயக்கத்தைக் கட்சியாகப் பதிவு செய்துள்ளதாகவும், இதற்கும் நடிகர் விஜய்க்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது எனவும் தெரிவித்திருந்தார்.
அதற்கடுத்து, தனது 'விஜய் மக்கள் இயக்க'த்தின் பெயரையோ, புகைப்படங்களையோ தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். எனது தந்தை ஆரம்பித்துள்ள கட்சியில் ரசிகர்கள் இணைய வேண்டாம். அதேபோல் அந்த அரசியல் இயக்கம் என்னைக் கட்டுப்படுத்தாது எனவும் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார் நடிகர் விஜய்.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில்,
விஜய் மக்கள் இயக்கத்தை, அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான தேவை என்ன?
எனக்குத் தேவைப்பட்டது நான் செய்கிறேன்.
நடிகர் விஜய்யும் நீங்களும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பேசவில்லை, இருவருக்கும் உறவு இல்லாத சூழல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது உண்மையா?
அவரவர்கள் கற்பனைகளுக்கு எல்லாம் விளக்கம் சொல்ல முடியாது. கரோனாவிலேயே இரண்டு மூன்று முறை போய் இருக்கிறோம், பேசியிருக்கிறோம். யாரோ ஒருவர் போவதில்லை பேசுவதில்லை என்று கூறினால், இதற்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை. நான் அவர் பெயரில் ஆரம்பிக்கவில்லை. அவர் பெயரில், 1993 ஆம் ஆண்டு, நான் உருவாக்கி, ரசிகர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு, பொது மன்றமாக மாறி, பிறகு மக்கள் இயக்கமாக மாறியது. அந்த மக்கள் இயக்கத்தில் இருக்கும் தொண்டர்களுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்க வேண்டும். ஏற்கனவே, அவர்கள் நல்ல விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்டவர்களுக்கு, ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, அதைப் பதிவு செய்து இருக்கிறேன் என்றார்.