திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பான விவகாரத்தில் வதந்தி பரப்பியவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ், வெளியானது போலியான வீடியோ, எனவே யாரும் பதற்றமடைய வேண்டாம் என அறிவுறுத்தினார்.
தமிழக முதல்வர் பிறந்தநாள் விழாவில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி பங்கேற்ற பிறகே இது தொடர்பான வதந்திகள் பெரிய அளவில் வெளியானதால் இதில் அரசியல் கட்சிகளின் பின்னணி இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பியது பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்களே என்பது அம்பலமாகியுள்ளது.
இந்தி பேசியதால் தமிழ்நாட்டில் 12 பேர் கழுத்தறுக்கப்பட்டு கொலை என வதந்தி பரப்பிய உ.பியை சேர்ந்த பிரசாந்த் உம்ராவ் உள்ளிட்ட 3 வடமாநிலத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான குற்றவாளிகளைக் கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைத்துள்ளது தமிழகக் காவல்துறை.