கரோனா வைரஸ் தாக்கத்தை விட மக்களிடம் எச்சரிக்கையும் ,விழிப்புணர்வு நடவடிக்கையும் கூடுதலாகியுள்ளது. அதே போல் அதுபற்றியான வதந்திகளும் தீவிரமாகப் பரவுகிறது. சமூக வலைத்தளங்களில் நொடிக்கு நொடி பயமுறுத்தல் பதிவுகளை சிலர் பதிவிடுவது உடனே காட்டுத் தீயாய் பரவுகிறது. இப்படி பரப்புவோர் மீது காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே கரூர், கடலூர் மற்றும் ஈரோட்டில் ஒருவர் வீண் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் மூவரை கைது செய்துள்ளது ஈரோடு போலீஸ்.
ஈரோடு அருகே உள்ள சித்தோடு பகுதியைச் சேர்ந்த வாசுதேவன், கமலேஸ், வரதராஜன் ஆகிய மூவரும் தொலைபேசி வழியாகவும் மக்களிடம் நேரிடையாகவும் கரோனா வைரஸ் பற்றி தேவையற்ற வீண் வதந்திகளைப் பரப்பி மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கை 122/2020 போடப்பட்டு குற்ற பிரிவுகள் U/S 269, 336 IPC ஆகிய செக்சனில் வாசுதேவன், கமலேஸ், வரதராஜன் மூவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளது ஈரோடு போலீஸ்.
வதந்திகளுக்கு என்னதான் கைது என்ற கடிவாளம் போட்டாலும் மீம்ஸ் ஈடுபாட்டாளர்களின் கை விரல்கள் அமைதியாக இருப்பதில்லை.