Skip to main content

பேருந்து மேற்கூரை இடிந்த விவகாரம்: விரைவில் விசாரணை அறிக்கை - ககன்தீப் சிங் பேட்டி!

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
பேருந்து மேற்கூரை இடிந்த விவகாரம்: விரைவில் விசாரணை அறிக்கை - ககன்தீப் சிங் பேட்டி!

கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் சமர்பிக்கப்படுமென விசாரணை அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

கடந்த 7 ம் தேதி கோவை மாவட்டம் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். பேருந்து நிலையம் கட்டுவதில் ஊழல் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை ஏடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் விபத்து தொடர்பாக தமிழக அரசு நியமித்த ஒரு நபர் விசாரணை குழு சம்பவ இடத்தில் விசாரணையை துவக்கியது. சோமனூர் பேருந்து நிலையத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையாளர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி விசாரணை நடத்தி வருகிறார். விபத்து குறித்து பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவும், மனுவாகவும் புகார்களை பெற உள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை அதிகாரி ககன்தீப்சிங் பேடி, தொழில்நுட்ப நிபுணர் குழுவினை கொண்டு விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் கட்டிட தரம், மண் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது, பேருந்து நிலையம் தொடர்பான விபரங்களை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும். அதில் விபத்திற்கான காரணம், இதுபோன்ற விபத்துகளை தவிர்ப்பதற்கான பரிந்துரைகள் இடம்பெறும்.

பேருந்து நிலைய கூரை சேதமடைந்து இருப்பது தொடர்பாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு இருந்ததாகவும், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததே உயிரிழப்புகளுக்கு காரணமெனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். பேருந்து நிலைய கட்டுமானம் மற்றும் பராமரிப்பில் ஊழல் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்