திருச்சி நவல்பட்டு காவிரி நகர் பகுதியில் உள்ளது திருவெறும்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகம். இந்த அலுவலகத்தில் உள்ள மோட்டர் வெஹிகிள் இன்ஸ்பெக்டர் தஞ்சையை சேர்ந்த சுந்தர்ராமன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய கார்கள் இரண்டுக்கு ஆர்.சி. புக் கொடுத்தாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வெஹிகிள் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராமன் சஸ்பெண்டுக்கு விளக்கம் கேட்க, அதற்கு ஆர்.டி.ஓ. சில நாட்களுக்கு முன்பு நீங்கள் கொடுத்த ஆர்.சி. புக் போலியானது என்று விளக்கம் கொடுக்க,அதர்ச்சியடைந்த வெஹிகிள் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் உள்ள சி.சிடிவி கேமிராவை ஆராய்ந்த போது… அந்த அலுவலகத்தில் உள்ள தற்காலிக ஊழியர் திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த அமலன் என்கிற அன்புச்செல்வன், புதுக்கோட்டையை சேர்ந்த பாலசுப்ரமணியன், பாலக்கரையை சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆகிய 3 பேரும் அலுவலகத்தில் உள்ள பழைய ஆர்.சி. புத்தகத்தின் தாள்களை கிழித்து விட்டு போலியாக புதிய ஆர்.சி.புக் தயாரித்து கொடுப்பது வீடியோவில் பதிவாகியிருந்து தெரிந்தது.
சிசிடிவி கேமிராவில் சிக்கிய காட்சிகளை வைத்து வெஹிகிள் இன்ஸ்பெக்டர் நவல்பட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். வெஹிகிள் இன்ஸ்பெக்டர் புகாரை அடுத்து ஆர்.டி.ஓ. அலுவலத்தில் உள்ள தற்காலிக ஊழியர் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
போலி ஆர்.சி.புக் தயாரித்து கொடுத்த இவர்களுக்கு வேறு யாரும் தொடர்பில் இருக்கிறார்களா, இவர்கள் இதற்கு முன்பு வேறு எந்த வாகனங்களுக்கும் தயார் செய்து கொடுத்தார்களா என்கிற ரீதியில் போலிஸ் விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வெஹிகிள் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டுக்கு பின்பு போலி ஆர்.சி.புக் தயாரித்த ஊழியர்கள் கண்டுபிடித்து கைது செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.