பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, ரெகாப் இந்தியா பவுண்டேஷன், ரெகாப் பவுண்டேஷன், கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, தேசிய மகளிர் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட் ஆகிய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அதேபோல் எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கும் 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் அவ்வமைப்பின் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ''ஒன்றிரண்டு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால் மொத்தத்தில் அவர்கள் (பிஃஎப்இ) பொதுவான மக்களுக்கான பணிகளை தான் செய்துவந்தார்கள். மழை, வெள்ள காலங்களில் ஆங்காங்கே சென்று சமூகசேவைதான் செய்து கொண்டிருந்தார்கள். சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவை சேர்ந்தவர்கள் சமூக சேவை தான் செய்து கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு இடங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். காவல்துறை நடவடிக்கை எடுத்தது ஒரு அளவில் அது செய்ய வேண்டிய கடமை தான். அதேநேரத்தில் மத வெறியை உண்டு செய்வதை போல் சனாதன சக்திகள் தமிழ்நாட்டில் ஊடுருவி, இதுவரை இருந்து வருகின்ற சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வேலையில் ஈடுபடுவதையும் நான் கண்டிக்கிறேன்.
சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் எல்லா காலத்திலும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போ மட்டும் என்று இல்லை. இப்போது சமூக நீதியை நிலைநாட்டவும், சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கும் ஸ்டாலின் மிகச் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாமல் போய்விட்டது. ஜிஎஸ்டியில் மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ளவில்லை. அது ஒரு காரணம் விலைவாசி உயர்வுக்கு. காந்தி பிறந்தநாள் அன்று பேரணி நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ்க்கு எந்த விதமான தகுதியும் கிடையாது என்பது எனது கருத்து'' என்றார்.