Skip to main content

அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா நாடுகளில் ஓ.பி.எஸ். குடும்பத்தினர் சொத்து குவிப்பு: ஆர்.எஸ்.பாரதி புகார் மனு

Published on 13/03/2018 | Edited on 13/03/2018

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனருக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பி உள்ளார்.

 

rs-bharathi


 

அதில், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துக்களின் பட்டியலுக்கும் வருமான வரித்துறையில் செலுத்தி உள்ள சொத்துக்களின் விவரங்களிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன.
 

ஓ.பன்னீர்செல்வம் மனைவி, மகன்கள், மற்றும் மகளின் பெயரிலும் அவரது சகோதரர் குடும்பத்தினர் பெயரிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. இவை அனைத்தையும் வருமான வரித்துறைக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை.
 

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு ஆகியோர் பல கம்பெனிகளில் இயக்குனர்களாக இருந்துள்ளனர். இவர்கள் பெயரில் ரூ.200 கோடிக்கு முதலீடு செய்துள்ளதாக அறிகிறேன்.

 

OPANNEERSELVAM


 

இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் சொத்துக்கள் வாங்கி உள்ளனர்.
 

தேனி மாவட்டத்தில் 99 ஏக்கர் இடத்தை அரசிடம் இருந்து ஒரு நிறுவனம் 99 வருட குத்தகைக்கு எடுத்திருந்தது. குத்தகை காலம் 2012-ம் ஆண்டு முடிந்த பிறகு மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு அதை பினாமி மூலம் வாங்கி உள்ளனர். இதன் மதிப்பு தோராயமாக ரூ.140 கோடி ஆகும்
 

இதேபோல் மாந்தோப்பு, உள்பட பல்வேறு விளை நிலங்களையும் வாங்கி உள்ளனர். மணல் காண்டிராக்டர் சேகர் ரெட்டியுடன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரடி தொடர்பு உள்ளது.
 

சென்னையிலும் பல நிறுவனங்களில் இவரது குடும்ப உறுப்பினர்கள் பணம் முதலீடு செய்துள்ளனர். பங்குதாரர்களாகவும் உள்ளனர்.

 

OPANNEERSELVAM SONS


 

இவை அனைத்தையும் முறையாக வருமான வரித்துறைக்கு அவர் கணக்கு காட்டவில்லை. எனவே வருமான வரித்துறை சட்டம், அன்னிய செலாவனி சட்டம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், இந்திய தண்டனை சட்டம், பினாமி சட்டம், ஆகிய சட்டங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு இருக்கிறார். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருக்கிறார்.
 

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தெந்த நிறுவனங்களில் பங்குத்தாரர்களாக உள்ளனர். எந்தெந்த சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கி உள்ளனர் என்ற விவரத்தையும் மனுவில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்