பிரதமர் மோடி 31,500 கோடி ரூபாயில் 11 திட்டங்களைத் தொடங்கி வைக்க கடந்த 26ம் தேதி தமிழகம் வந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் வெளிப்படையாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். "கச்சத்தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை 14 ஆயிரத்து 6 கோடி ரூபாயை விரைந்து வழங்கிட வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்" எனக் கோரிக்கைகளை முன்வைத்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விடுவித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு மட்டும் 9,062 கோடி ரூபாய் நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 86,912 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.