அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.68.30 லட்சம் மோசடி தலைமை ஆசிரியர் உட்பட மூவர் கைது!
சேலம் மாவட்டம், மேட்டூரிலுள்ள இராமன் நகரைச் சேர்ந்தவர் தமிழரசி (வயது-47). சேலத்தில் உள்ள நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறையின் தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த இரு மாதம் முன்பாகவே இவர் சென்னைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், அங்கி சென்று பணியில் இணையாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
தமிழரசி தனக்கு அரசு உயர் அதிகாரிகள் பொறுப்பில் உள்ள பலரை தெரியும் என்று கூறியும், அவர்கள் மூலம் உங்களுக்கு அரசு வேலை பெற்றுக்கொடுகிறேன் என்று கூறி இப்பகுதியை சேர்ந்த பாலரிடம் பணம் பெற்றுள்ளார்.
இவருடன், இடைப்பாடி, ஆலச்சிபாளையம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் ஆறுமுகம் (வயது-48). அதே பகுதியை சேர்ந்த தீப்பொறி நடராஜன் (வயது-62), வீரக்கல் புதூர் பேரூராட்சி முன்னாள் தலைவர், பா.ம.க., பிரமுகர் தமிழ்வாணன் (வயது-35). ஆகியோர் சேர்ந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து, 2014-இல், தமிழக அரசுப்பள்ளி ஆய்வகங்களில் உதவியாளர் பணி காலியாக உள்ளதாகவும், அந்த வேலையை வாங்கித் தருவதாக சிலரிடம் தெரிவித்துள்ளனர்.
இதை நம்பி, இராமன் நகரைச் சேர்ந்த, 30-க்கும் மேற்பட்டோர், தமிழரசியிடம் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், பணம் கொடுத்த யாருக்கும் வேலை கிடைக்காததால், தமிழரசியிடம் பணம் கொடுத்த 12 பேர், தாங்கள் செலுத்திய, 68.30 லட்சம் ரூபாயை திருப்பி கேட்டுள்ளனர்.
இவர்களுக்கு பணம் தராமல் இழுத்தடித்து வந்த தமிழரசி, பணத்தை திருப்பி கொடுக்க முடியாது, உங்களால் என்ன செய்யமுடியுமோ செய்துகொள்ளுங்கள் என்று கூறி அவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால், பாதிக்கபட்ட்ட இராமன் நகரை சேர்ந்த சிவராஜ்(வயது-32), தலைமையில், 12 பேர், சேலம் எஸ்.பி., இராஜனிடம் தமிழரசி உள்ளிட்ட நால்வர் மீதும் புகார் அளித்தனர்.
இதைதொடர்ந்து, மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு ஆகியோர், தமிழரசி உள்பட நான்கு பேரை அழைத்து, நான்கு மாதங்களாக விசாரணை நடத்தினர்.
வேலை வாங்கித்தருவதாக வாங்கிய பணத்தை திரும்ப தருவதாக கூறிய அவர்கள் நாட்களை கடத்திக்கொண்டே பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.
இதனால், நேற்று மாலை இராமன் நகர் சென்ற போலீசார், தமிழரசியை கைது செய்ய முயன்றபோது, அவருடைய வீடி வளர்த்து வரும் இருபதுக்கும் அதிகமான நாய்களை அவிழ்த்து விட்டு போலீசார் வீட்டுக்குள் வர முடியாதபடி செய்துள்ளார்.
ஆனால், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபு தலைமையில் சென்ற போலீசார், பிஸ்கட் வாங்கி நாய்க்கு போட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்துள்ளனர். நாய்கள் அசந்த நேரத்தில், பெண் போலீசார் தமிழரசியை கைது செய்து வெளியே கொண்டுவந்தனர்.
அப்போது, ஒரு பெண் போலீசாரை நாய் கடித்துவிட்டது. மேலும், இராமன் நகரில் இருந்த நடராஜன், தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான தமிழ்வாணனை தேடி வருகின்றனர்.
- பெ.சிவசுப்பிரமணியம்