சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்த திருமலை (18) இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு ஐடிஐயில் பயின்று வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை மாலை அவரது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த விஷ்ணு, பழனி ஆகிய மூன்று பேரும் வேளக்குடி கிராமத்தையொட்டி ஓடும் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது ஆற்றுத் தண்ணீரில் சத்தம் கேட்டுள்ளது. இதனைப் பார்த்த அனைவரும் விறுவிறு என கரைக்கு வந்துள்ளனர். அப்போது இவர்கள் குளிக்கப் பயன்படுத்திய சோப்பு ஆற்றின் கரையோரத்தில் விழுந்துள்ளது. இதனைத் திருமலை எடுக்க முயன்றபோது ஆற்றிலிருந்த முதலை திருமலையின் காலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளது. பின்னர் அங்கிருந்த நண்பர்கள் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் முதலையைச் சத்தமிட்டு விரட்ட முயன்றும் முதலை திருமலையை ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது.
பின்னர் இதுகுறித்து தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர், காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேல் தேடிய நிலையில் திருமலை உடல் ஒரு புதரில் கிடந்தது. உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அறிந்த சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன், சிதம்பரம் காவல் உதவி கண்காணிப்பாளர் ரகுபதி, வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் முதலை கடித்து பலியான திருமலையின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் முதற்கட்ட நிவாரணமாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சுமேஷ் சோமன், பாலசுப்பிரமணியம், சிதம்பரம் வனசரக அலுவலர் சரண்யா வனத்துறையினர் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்துகொண்டனர்.