Published on 22/12/2020 | Edited on 22/12/2020
முறையான ஆவணங்கள் இல்லாமல் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கொண்டு சென்ற 50 லட்சம் ரூபாயைக் குமுளியில் கேரள போலீஸார் காருடன் பறிமுதல் செய்தனர்.
தமிழக எல்லை குமுளியில், நேற்று இரவு கேரள போலீஸார் வாகன சோதனை நடத்தினர். அப்போது தமிழகப் பகுதியிலிருந்து கேரளா சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்தக் காரில் சூட்கேஸ் ஒன்றில் 50 லட்சம் ரூபாய் இருந்தது. இதையடுத்து காரில் வந்தவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் கம்பம் என்.கே.பி. தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் ராஜீவ் என்பது தெரியவந்தது. முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதால் பணத்தையும், காரையும் கேரள போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வருமான வரித் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.