மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவருபவர் ஷேக்ஸ்பியர். இவரது மனைவி சாந்தி (45). இந்த தம்பதியின் மகள் ஐஸ்வர்யா (24) படிப்பை முடித்த கையோடு பாஸ்கரன் (31) என்பவரைக் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. மகளுக்கு இரட்டை குழந்தை பிறந்த தகவலை அறிந்த சாந்தி மகளுடன் நெருக்கமாக பழகியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாஸ்கரன் - ஐஸ்வர்யா தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மதுரையிலிருந்து கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள சேரன் நகர் நாகப்பா காலனிக்கு வந்துள்ளனர்.
அப்போது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்காக சாந்தியும் உடன் வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக சாந்தி இவர்களுடன் தங்கியிருந்து குழந்தைகளை அன்பாக கவனித்தும், பராமரித்தும் வந்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை (21.10.2021) இரவு ஐஸ்வர்யா மருத்து வாங்குவதற்கு கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டிக் கிடந்தது. கதவை பலமுறை தட்டிய பிறகே சாந்தி கதவைத் திறந்து வெளியே வந்தார். அப்போது ஐஸ்வர்யா தனது குழந்தைகளைத் தேடி ஓடினார். குழந்தையை யாரோ வந்து எடுத்துச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார் சாந்தி. இதனால் அதிர்ச்சியடைந்து வீட்டுக்குள் சென்று தேடியபோது, ஆண் குழந்தை படுக்கையில் தூங்கிய நிலையில் இருந்துள்ளது.
பெண் குழந்தையைத் தேடியபோது, அந்தக் குழந்தை வீட்டின் கழிவறை குழாய்க்குள் அழுத்தி துணியை வைத்து மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து பெண் குழந்தையை மீட்ட ஐஸ்வர்யா, படுக்கையில் கிடந்த ஆண் குழந்தையைத் தூக்கச் சென்றபோது குழந்தையின் பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார். இதற்குள்ளாக வீட்டில் இருந்த சாந்தி அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் இதுகுறித்து ஐஸ்வர்யா தனது கணவருக்குத் தகவல் தெரிவிக்க உடனடியாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த பெண் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இறந்த ஆண் குழந்தையைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தப்பி ஓடிய சாந்தியை பிடிக்க போலீசார் மதுரை விரைந்தனர். போலீஸ் விசாரணையில், “தனது மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவர், மேலும் அவருக்கு அவ்வப்போது மனநிலை மாறும். அப்படிபட்ட சூழலில் ஏதாவது செய்திருக்கலாமோ?” என கூறியுள்ளார் ஷேக்ஸ்பியர்.