திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகங்களை உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். இதில் தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தில் உள்ள திறந்தவெளி நெல் கிடங்கை ஆய்வு செய்துவிட்டு மேற்கூரையுடன் கட்டப்பட்டு வரும் நிரந்தர சேமிப்புக் கிடங்கையும் பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “மூன்று லட்சம் டன் நெல்லை சேமித்து வைப்பதற்காக மேற்கூரையுடன் நிரந்தர கிடங்குகள் ரூ.250 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 20 இடங்களில் நடைபெற்று வருவதால், வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் முடிவடையும். தமிழக முழுவதும் தனியார் பங்களிப்புடன் 13 நவீன அரிசி ஆலை தொடங்கப்பட இருக்கிறது. அதில் தினமும் 6800 மெட்ரிக் டன் அரிசி அறவை செய்யப்படும். அதுபோல் 7 லட்சத்து 904 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இனிவரும் காலங்களில் திறந்த வெளியில் நெல் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியதின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் கருப்பு பழுப்பு இல்லாத அளவுக்கு அரிசி, நெல் ஈரப்பதத்தை 21% உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ், நுகர் பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.