திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அங்கப்பன் எனும் விக்னேஷ். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் அருணாச்சல மலையில் கிரிவலம் சுற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகை ஒன்று விக்னேஷ் தலையில் விழுந்தது. உடனடியாக, அவரது நண்பர்கள் விக்னேஷை கோவில் மருத்துவ முகாமுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், விக்னேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.
பதாகை விழுந்ததால் தனது மகன் இறந்துவிட்டார் என மகனின் இழப்புக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி விக்னேஷின் தந்தை, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று அளித்தார். இது தொடர்பான மனு, நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “விக்னேஷின் மரணத்திற்கு பதாகை விழுந்தது தான் முக்கிய காரணம் என்று கருத முடியாது. இருந்தாலும், பதாகை முறையாக நிறுவப்பட்டுள்ளதா என்பதை உள்ளாட்சி அமைப்பு உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பாதுகாப்பற்ற முறையில் பதாகைகளை நிறுவியதால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதையும் நான் எனது கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். மேலும், லட்சக்கணக்கான பக்தர்களைக் கொண்டுள்ள இந்த திருவண்ணாமலை கோவில் பக்தர்களின் நலனுக்காக பல ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனால், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்பும் பொறுப்பில் இருக்கிறது என்பதையும் கூறிக்கொள்கிறேன்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் படிப்பை கவனித்த நீதிபதி, பாதிக்கப்பட்டவருக்கு நான்கு வாரங்களுக்குள் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.