Skip to main content

தையல் போட்ட துப்புரவுபணியாளர் இடமாற்றம்... பணியின்போது காணாமல் போன டாக்டருக்கு? -அரசு மருத்துவமனை அவலத்தின் உச்சம்

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பெரியாளூர் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த கார்த்தீபன் (38) என்ற இளைஞர் திங்கள் கிழமை மாலை கீரமங்கலத்தில் நடந்த விபத்தில் ஹெல்மெட் உடைந்து குத்தியதில் பலத்த காயமடைந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அந்த நேரத்தில் பணி மருத்துவர் இல்லாத நிலையில் கார்த்தீபனுக்கு மருத்துவமனை துப்புரவுபணியாளர் கோவிந்தராஜன் தையல் போட்டார். இந்த காட்சி வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இந்தநிலையில் நக்கீரன் இணையத்திலும் செய்தி வெளியாகியிருந்தது.

 

INCIDENT IN ARANTHANGI HOSPITAL


அதன் பிறகு செவ்வாய் கிழமை புதுக்கோட்டை மாவட்ட சுகாதார இணை இயக்குநர் சந்திரசேகரன் இது பற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டார். புதன் கிழமை மனிதாபிமான அடிப்படையில் தையல் போட்ட துப்புரவுப் பணியாளர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பணியின் போது காணாமல் போன மருத்துவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இது குறித்து இணை இயக்குநர் சந்திரசேகரனிடம் கேட்டபோது, விசாரணை நடத்தி கோவிந்தராஜனை மணமேல்குடிக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். தையல் போடும் பணியை செய்ய வேண்டிய அந்த நேரத்திற்கான பணி மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இல்லாதபோது தான் துப்புரவுப் பணியாளர் தையல் போட்டிருக்கிறார். ஆனால் தையல் போட்டவரை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணி நேரத்தில் அவசர சிகிச்சைக்கு தையல் போட வேண்டிய நேரத்தில் காணாமல் போன மருத்துவர் மற்றும் பணியாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற நமது கேள்விக்கு,

முதல்கட்டமாக தையல் போட்ட கோவிந்தராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அடுத்து டாக்டர்கள், செவிலிரயர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

கீழ்நிலைப் பணியாளர் என்றால் கேள்வி கேட்பாரின்றி  நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் உயர்பதவி என்றால் தயங்குவது ஏனோ?

இது குறித்து கார்த்தீபனின் சகோதரர் காந்தி நம்மிடம், காயமடைந்து கொண்டு வந்தபோது அவரை பார்க்க கூட மருத்துவர் வரவில்லை. அதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் கோவிந்தராஜன் தையல் போட்டார். அதன் பிறகு ஊழியர்களிடம் சத்தம் போட்டு சிகிச்சை அளிக்க சொன்னோம். அப்ப கூட மருத்துவர் வரல. அடுத்த நாள்தான் மருத்துவர் வந்து பார்த்தார். ஏழைகளின் உயிர் மீது இப்படி அலட்சியம் காட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மனிதாபிமானத்தோடு செயல்பட்டவர் மீது நடவடிக்கை என்பது வேதனை அளிக்கிறது. அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு பிறகு பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறோம் என்றார்.

சில நாட்களுக்கு முன்புதான் அமைச்சர் விஜயபாஸ்கர் தரச்சான்று வழங்கி மருத்துவமனையை பாராட்டிச் சென்றார். ஆனால் அடுத்த சில நாட்களில் இப்படி.  துப்புரவுப் பணியாளர் தையல் போடும் வீடியோ, செய்திகள் வெளியான நிலையில் சில நாட்களாக மருத்துவமனை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்