விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகரில் உள்ள கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், வயது 46. இவர், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ரயில்வே பயிற்சி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த குருதேவனுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தனக்குத் தெரிந்த தமிழக அமைச்சர் ஒருவர் மூலம் பெற்றுத் தருவதாகக் கூறி, இந்தப் பணிகளுக்குப் பணம் கொடுத்தால் வேலை வாங்கிக் கொடுப்பதாக பாலமுருகனிடம் உறுதி கூறியுள்ளார் குருதேவன்.
இதனை நம்பிய பாலமுருகன், கடந்து 2017ஆம் ஆண்டு தனது உறவினர் ஒருவருக்கு தமிழக அரசுப் பணிக்காக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம். தனது மனைவிக்கு வேலை வாங்கித் தருமாறு ரூ.3 லட்சம். மற்றும் இன்னொரு நண்பரின் மனைவிக்கு வேலை வாங்கித் தருமாறு ரூ.2,25,000 என மொத்தம் 3 பேர்களுக்கு வேலைக்காக ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல், காவலர் வீட்டு வசதி வாரிய கழகத்தில் பணிபுரிந்துவந்த பாலமுருகனைச் சந்திக்க குருதேவன் அடிக்கடி அங்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு உதவிப் பொறியாளராகப் பணியாற்றிவந்த தமிழ் அமுதன் என்பவரின் மகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.12 லட்சத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். இப்படி மொத்தம் ரூ.19 லட்சத்து 70 ஆயிரம் பெற்றுக்கொண்ட பாலமுருகன், வாக்குறுதி அளித்தபடி யாருக்கும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
பல ஆண்டுகளாகியும் யாருக்கும் வேலையும் வாங்கிக் கொடுக்காமல், கொடுத்த பணத்தைக் கேட்டால் திருப்பித் தராமலும் ஏமாற்றி வந்துள்ளார். காலம் கடந்ததால் குருதேவன் தங்களை ஏமாற்றுகிறார் என்பதைப் புரிந்துகொண்ட பாலமுருகன் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நேற்று குருதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இவ்வழக்கில் குருதேவனுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி சென்னையைச் சேர்ந்த மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தைப் பறிகொடுத்தவர்கள் தற்போது கொடுத்த பணம் திரும்பக் கிடைக்குமா கிடைக்காதா என்ற தவிப்பில் உள்ளனர்.