திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மைய நாயக்கனூரை சேர்ந்தவர் ஸ்ரீராம்ரஞ்சித் பாபு. கொடைக்கானல் போக்குவரத்துக் காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி கொண்டிருக்கும் போது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார்.
இந்தத் தகவல் 2008-ஆம் ஆண்டு பயிற்சி எடுத்து சார்பு ஆய்வாளராக தேர்வான சகக் காவலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பணி புரியும் 2008-ஆம் ஆண்டு தேர்வான சார்பு ஆய்வாளர்கள் 700-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தங்கள் சொந்தப் பணத்திலிருந்து நிதி திரட்டி ஸ்ரீராம்ரஞ்சித் பாபுவின் குடும்பத்திற்கும் வழங்க முடிவு செய்தனர்.
இதனையடுத்து திரட்டப்பட்ட நிதி ரூபாய் 17 லட்சத்தை அவரது குடும்பத்திடம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அம்மைய நாயக்கனூரில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிவிட்டு சார்பு ஆய்வாளர்கள் சார்பில் திரட்டப்பட்ட ரூபாய் 17 லட்சம் நிதியினை குடும்பத்தினரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது ஸ்ரீராம் ரஞ்சித் பாபு உடன் தேர்வான சார்பு ஆய்வாளர்கள் 25-க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர். தங்களுடன் தேர்வான காவலர் குடும்பத்திற்கு காவலர்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டிக் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் பொதுமக்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.