புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் பயிற்சியின் போது வெடித்த சில குண்டுகள் சிதறியுள்ளன. அப்போது கொத்தமங்கலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புகழேந்தி (11) என்ற 6ம் வகுப்பு படித்த மாணவன் நார்த்தாமலையில் உள்ள தாத்தா முத்து வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று மாணவன் தலையில் எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு துளைத்து மயங்கிய நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று மாணவனை பார்த்து பெற்றோருக்கு ஆறுதல் கூறி தற்காலிக நிவாரணம் நிதியாக ரூ.1 லட்சம் வழங்கிச் சென்றார். அதே போல் நேற்று மாலை சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தகவல் வெளியான நிலையில் நார்த்தாமலை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் திருச்சி மண்டலத்தில் இருந்து 5 மாவட்ட போலீசார் பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிறுவன் காயமடைந்தது முதல் தொடர்ந்து சிறுவனுக்காக மருத்துவமனையில் காத்திருந்து ஆட்சியர்வரை பேசியிருந்த கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ. (சிபிஎம்) சின்னத்துரை சிறுவன் இறந்த தகவல் அறிந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரைப் பார்த்து கதறி அழுத பெற்றோரைத் தேற்ற முடியாமல் எம்எல்ஏ கண்ணீர் வடித்தார். அதே போல் இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, பெற்றோர் தங்குவதற்கு வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தர வேண்டும். இந்தச் சம்பவம் குறித்து நீதிவிசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.