பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 52) கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் 23 ஆவது நபராக கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனை வேலூர் சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்த காவல்துறையினர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றுள்ளனர். ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரன் சிறைக்குள் வைத்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் திட்டியதாக கடந்த 9 ஆம் தேதி செம்பியன் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அதற்கு முன்னதாகவே ரவுடி நாகேந்திரனின் மகனும், முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக அஸ்வத்தாமனை 4 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், அவருடை தந்தை ரவுடி நாகேந்திரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.