ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (வயது 52) கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தொடர் கைதுகள் நடைபெற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரவுடிகள், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் என இந்த கொலை வழக்கில் ஏற்கனவே 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக நேற்று இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்புவை டெல்லியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடி குண்டுகளை சப்ளை செய்தவர் ரவுடி அப்பு என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்து அவரை தேடி வந்தனர். நேற்று டெல்லியில் பதுங்கியிருந்த ரவுடி புதூர் அப்புவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சீசிங் ராஜாவை தாம்பரம் போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பாவில் தலைமறைவாக இருந்த சீசிங் ராஜாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.