சேந்தன்குடியில் இரண்டாவது நாளாக பள்ளி மாணவர்களுக்கு வழங்க இருந்த முட்டைகளும் கெட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமஙகலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திங்கள் கிழமை மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவோடு வழங்க தயாரிக்கப்பட்ட முட்டைகள் துர்நாற்றத்துடன் பாதி உதிர்ந்த நிலையில் முட்டைகள் இருந்ததால் பொதுமக்கள் அந்த கெட்டுப்போன முட்டைகளை மாணவர்களுக்கு வழங்க கூடாது என்று கூறிவிட்டனர்.
இந்த நிலையில் செவ்வாய் கிழமை அதே ஊரில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் சுமார் 220 மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுக்காக தயாரிக்கப்பட்ட முட்டைகளில் ஏராளமான முட்டைகள் அழுகிய நிலையில் பாதி உடைந்தும் துர்நாற்றத்துடன் காணப்பட்டது. அதனால் அந்த முட்டைகளையும் மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டாம் என்று பொதுமக்கள் கூறிவிட்டனர்.
சேந்தன்குடி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழக்கப்படும் முட்டைகளில் அதிகமாக கெட்டுப்போன முட்டைகள் இருக்கும் தகவல் அறிந்த அதற்காண கண்காணிப்பாளர் சேந்தன்குடி பள்ளிகளில் ஆய்வு செய்து ஒதுக்கி வைக்கப்பட்ட முட்டைகளை எடுத்துச் சென்றுள்ளார். எடுத்துச் செல்லப்பட்ட அழுகிய முட்டைகளை ஒன்றிய மாவட்ட அதிகாரிகளிடம் காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிகளில் ஆய்வு செய்த கண்காணிப்பாளர்கள் கூறும் போது.. ஒரு சில பள்ளிகளில் இறக்கப்பட்ட முட்டைகளில் உடைந்த முட்டைகளை கவணிக்காமல் அவிக்கப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. முற்றபடி அதிகமான முட்டைகள் அழுகவில்லை. இருந்தும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருகிறோம் என்றனர்.
ஒரே ஊரில் அடுத்தடுத்த பள்ளிகளில் அடுத்தடுத்த நாட்களில் மாணவர்களுக்கு வழங்க இருந்த முட்டைகள் துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல கீரமங்கலத்திலும் ஒரு பள்ளியில் மதிண உணவுக்காக தயாரிக்கப்பட்ட முட்டைகள் அழுகி இருந்துள்ளது.