Skip to main content

ரோகிங்கியா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்க மறுக்கும் மோடி: வேல்முருகன் கண்டனம்!

Published on 16/09/2017 | Edited on 16/09/2017
ரோகிங்கியா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்க மறுக்கும் மோடி: வேல்முருகன் கண்டனம்!

ரோகிங்கியா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்க மறுக்கும் மோடிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தன் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“சட்டத்தின் ஆட்சி” என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை! ஆனால் மோடியின் தன்னிச்சையான முடிவுகள் எதுவும் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதுமில்லை, விவாதிக்கப்படுவதுமில்லை. எனவே அவர் சட்டத்தின் ஆட்சி நடத்தவில்லை என்றாகிறது. இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும்.

அப்படி அரசியல் சாசனத்திற்குப் புறம்பான ஒரு தன்னிச்சையான முடிவை குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக எடுத்திருக்கிறார் அவர். மியான்மர் நாட்டு ராணுவம் அந்நாட்டின் குடிகளான “ரோகிங்கியா முஸ்லிம்கள்” மற்றும் சிறுபான்மைக் கிறிஸ்தவர்கள் மீது கொடூர தாக்குதலைக் கட்டவிழ்த்து, வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றி வருகிறது. இதனால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஙிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

அகதிகளான அவர்களில் சுமார் 3 லட்சம் பேர் வங்க தேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். சுமார் 40 ஆயிரம் பேர் இந்திய எல்லைப்புறத்தை வந்தடைந்தனர். ஆனால் மோடி, “இந்த ரோகிங்கியா முஸ்லிம்களை இந்தியாவுக்குள் அனுமதிப்பதில்லை; ஏன் எனில் அவர்களால் இந்தியாவுக்கு ஆபத்து நேரிடும்; தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் தொடர்புடையவர்கள் என அவர்களைப் பற்றி உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது” என்கிறார்.

இலங்கையில் பவுத்த சிங்களப் பேரினவாதம் தமிழர்களை இன அழிப்பு செய்துவருவதைப் போன்றதொரு நிகழ்வுதான் இது. மியான்மரிலும் பவுத்தம்தான் அதிகாரத்தில் இருக்கிறது. மியான்மரின் ராணுவ சர்வாதிகாரத்தை முன்பு எதிர்த்து போராடி வந்த ஆங்சான் சூக்யியின் கட்சிதான் இப்போது அங்கு ஆட்சியில் உள்ளது. அந்த ராணுவத்தை வைத்தே “ஜனநாயகவாதி” என தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆங்சான் சூக்யி, ரோகிங்கியா முஸ்லிம்களை படுகொலை செய்கிறார், அடித்துத் துரத்துகிறார் என்பதுதான் வரலாற்று சோகம்!

இப்படி படுகொலை அரசியலை அவர் நடத்தக் காரணமே பவுத்த மதவாத ஆட்சியை அவர் நடத்துவதுதான். அதே போன்று மதவாத பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை நடத்துகிறார் மோடி. அதனால்தான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அகதியாக ஓடிவரும் ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்க மறுக்கிறார்.

ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான மியான்மரின் ராணுவத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்த ஐக்கிய நாடுகள் அவை, அந்தத் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று எச்சரித்துள்ளது. அதோடு, அகதிகளாக வரும் ரோகிங்கியா முஸ்லிம்களை உலக நாடுகள் கடமை உணர்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கு நேர் மாறாக மோடி, அவர்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்து, படுகேவலமான அரசியலின் சின்னமாகியிருக்கிறார். ரோகிங்கியா முஸ்லிம்களை அகதிகளாக அங்கீகரிக்க மோடி மறுப்பதானது, இந்திய அரசியல் சாசனத்திற்கும் அகதிகள் குறித்த சர்வதேச சட்டங்களுக்குமே புறம்பானதாகும்.

தான் ஏற்க மறுப்பது மட்டுமன்றி வங்கதேச அரசையும் “ரோகிங்கியா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்க வேண்டாம்” என நிர்பந்தம் செய்வதாகவும் தகவல் வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதற்காகவே வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார் எனவும் சொல்லப்படுகிறது.

இப்படி அரசியல் சாசனத்தையும் சர்வதேச சட்டங்களையும் மீறி, அரசையே குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராகக் கொண்டு செலுத்தும் மோடியை வன்மையாகக் கண்டிப்பதுடன்; ரோகிங்கியா முஸ்லிம்களை அகதிகளாக ஏற்க மறுக்கும் முடிவை உடனடியாகக் கைவிடுமாறும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்