விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ளது இறையானூர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். மாற்றுத்திறனாளியான இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக திண்டிவனம் புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் அலுவலக ஊழியராக வேலை செய்துவருகிறார். அவருடன் அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் பணி செய்து வருகிறார். நேற்று அதிகாலை பெட்ரோல் பங்க் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர், தாங்கள் வந்த வாகனத்திற்கு பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து சுரேஷ், வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்த மூன்று பேரில் ஒருவர், சுரேஷை தாக்கி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தைப் பறித்தார். மற்றொரு நபர், பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் இருந்த மாற்றுத்திறனாளி செந்தில்குமாரை தாக்கி, அரிவாளால் கையில் வெட்டியுள்ளார். அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துள்ளனர். பின்னர், அவர்கள் தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். மர்ம நபர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவரிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
எதிர்பாராத தாக்குதலால் மிரண்டுபோன பெட்ரோல் பங்க் ஊழியர்கள், இதுகுறித்து உடனடியாக திண்டிவனம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பார்வையிட்டு அங்குள்ள கண்காணிப்பு கேமராவை வைத்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். அதிகாலை நேரத்தில் பெட்ரோல் பங்கில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது