நெல்லை கங்கைக்கொண்டானில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ஜெயலலிதாவின் 90 சதவீத தொண்டர்கள் எங்கள் பக்கம் நிற்கிறார்கள். இந்தக் கட்சி யாருக்கும் கைகட்டிக்கொண்டு நிற்காது. அடிமை ஆட்சி என்று சொல்லப்படுகின்ற ஆட்சி நடத்தும் கட்சியுடன் நான் சேர வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
துரோகிகள் எந்த தேர்தலையும் விரும்பவில்லை. நாடகமாடுகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஆட்சியை இழுத்துச் செல்ல என்ன என்ன வழிமுறைகள் இருக்கிறதோ அதனை அவர்கள் நயவஞ்சகமாக செய்து வருகிறார்கள்.
சின்னம் என்பது இந்த விஞ்ஞான உலகத்தில் பெரிய விஷயமே அல்ல. அந்த சின்னம் யாரிடம் இருக்கிறது என்பதுதான். கட்சி பெயர் தெரியாதவர்களுக்குக் கூட டிடிவி தினகரன் சின்னம் குக்கர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதிமுக எங்களது உரிமை. அதனை மீட்டெடுக்க போராடுகிறோம். மீட்டெடுத்த பிறகு இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொள்வோம் என்று தொண்டர்கள் சொன்னால் வைத்துக்கொள்வோம். இல்லையென்றால் குக்கர் சின்னத்திலேயே தொடருவோம். அதிமுக என்ற கட்சியை திரும்பவும் மீட்டெடுப்போமே தவிர அதனை பயன்படுத்துவதும், பயன்படுத்தாததும் தொண்டர்கள் விருப்பம்.
ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள பதவி இருந்தால் போதும் என்று கட்சியை நடத்தி கொண்டிருப்பவர்களோடு நான் சேரவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.
ஒரு பெரிய பழைய கட்சி எங்களிடமிருந்து ஒருவரை தூண்டில் போட்டு வளைக்கும அளவிற்கு போனதற்கு காரணம் ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்ததால் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக சிறுபிள்ளை தனமாக செய்திருக்கிறார்கள். திருவாரூர் தொகுதியில் ஒரு அடி கொடுத்தால் அதன் பிறகு சரியாகிவிடுவார்கள்.
20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம். என்னுடைய கணிப்பின்படி திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். இவ்வாறு கூறினார்.