கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டைத் தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் மலைப் பிரதேசமான உதகை மற்றும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கடந்த ஏப்ரல் கடைசி தேதி முதல் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். இதனால் உதகை நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, வழக்கு ஒன்றில் வரும் மே 7ஆம் தேதி முதல் உதகை மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் இ-பாஸ் வாங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இ-பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என அரசுக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே சுற்றுலாத்தலங்களில் அனுமதி தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இது நீலகிரி மாவட்ட மக்களுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருக்கும் விவசாயிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்ட TN 43 என்ற பதிவெண் கொண்ட வாகனங்கள் ஊட்டி செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இ-பாஸ் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், கொடைக்கானல் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் அசோசியேசன் சார்பில் இன்று (04-05-24) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது, ‘இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிடில் கொடைக்கானல் தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும்’ என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார். அதில், ‘ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் மட்டுமே போதுமானது. இந்த நடைமுறை மே 7 முதல் மே 30 வரை சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது. அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தும், உள்நாட்டு மக்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்தும் இபாஸ் பெற்றுக் கொள்ளலாம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.