Skip to main content

வீடு புகுந்து கத்திமுனையில் கொள்ளை! 

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

Robbery at government bus conductor home

 

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசெல்வம். இவர், விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்து நடத்துநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புகழ்செல்வி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். 

 

இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் தங்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, அதிகாலை சுமார் 2 மணியளவில் திரைப்படத்தில் வருவதுபோல் மர்ம நபர்கள் அவர்களது வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர். சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த புகழ்செல்வி எழுந்துள்ளார். அவரை கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய அந்த மர்ம கும்பல், அவர் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயின் மற்றும் தோடு, மோதிரம் ஆகியவற்றை பறித்துள்ளது. சத்தம் கேட்டு அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் கொள்ளையர்களை தடுக்க முயன்றபோது அவர்களை கத்தியால் குத்திக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன அவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளனர். 

 

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து ராஜசெல்வம், பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்திவருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்