Skip to main content

சேலத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து 3 கடைகளில் மேற்கூரையை பிரித்து திருட்டு!

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

Robbery in 3 shops in Salem overnight!

 

சேலத்தில், ஒரே இரவில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் மேற்கூரையை பிரித்து, உள்ளே இறங்கி பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 


சேலம் மாமாங்கத்தைச் சேர்ந்தவர் லெனின். இவர், சேலம் 5 சாலை பேருந்து நிறுத்தம் அருகே, பிவிசி பைப் கடை வைத்துள்ளார். இவருடைய கடை அருகே, ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த இலங்கேஸ்வரன் என்பவர் ஜெராக்ஸ் கடையும், அதன் அருகில் அழகாபுரத்தைச் சேர்ந்த சாதிக் பாஷா என்பவர் பேக்கரி கடையும் நடத்தி வருகிறார். 


கடந்த சனிக்கிழமை (மே 14) இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு, கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை பூட்டிவிட்டு வீடு திரும்பினர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (மே 15) அவர்கள் கடைகளைத் திறக்க வந்தனர். அப்போது மூன்று பேரின் கடைகளின் மேற்கூரையும் பிரிக்கப்பட்டு இருப்பதும், கடையின் உள்ள கல்லாப்பெட்டியை உடைத்து அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 


மர்ம நபர்கள் முதலில் பிவிசி பைப் கடைக்குள் புகுந்துள்ளனர். அந்த கடையின் கல்லா பெட்டியில் இருந்த 18 ஆயிரம் ரூபாயை திருடிய மர்ம நபர்கள், அடுத்து பக்கத்தில் உள்ள ஜெராக்ஸ் கடைக்கும் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கியுள்ளனர். அந்தக் கடையின் கல்லாவில் இருந்த 45 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் அரை பவுன் நகையை திருடியுள்ளனர். 


அதன் அருகில் உள்ள பேக்கரி கடைக்குள்ளும் புகுந்த மர்ம நபர்கள், கல்லாவில் இருந்த 3500 ரூபாயை திருடியுள்ளனர். மூன்று கடைகளின் மேற்கூரையும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டால் ஆனது. அதனால் திருடர்கள் எளிதில் பிரித்து உள்ளே இறங்கியுள்ளனர். சனிக்கிழமை இரவு மழை பெய்ததால், வாகன போக்குவரத்து, ஆள் நடமாட்டமும் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். 


இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்தில் நேரில் சென்ற விசாரணை நடத்தினர். தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு 11.20 மணிக்கு உள்ளே நுழைந்துள்ளனர். 12.20 மணி வரை கடைக்குள் இருந்துள்ளது தெரிய வந்ததுள்ளது. 


இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது பழைய குற்றவாளிகளா அல்லது கடைக்காரர்களை பற்றி நன்று அறிந்தவர்களே இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்