விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(50), கார் டிரைவராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி ஜெகதா, இவர்களது மகள் கீர்த்தனா, இருவரும் கொட்டியாம்பட்டி என்ற கிராமத்தில் தபால் நிலையத்தில் வேலை செய்து வருகின்றனர். நேற்று காலை சரவணன் வழக்கம்போல் கார் ஓட்டுவதற்கு கார் ஸ்டாண்டுக்கு சென்றுவிட்டார். ஜெகதா அவரது மகள் கீர்த்தனாவும் தபால் நிலையத்திற்கு வேலைக்குச் சென்று விட்டனர்.
அன்று மதியம் பணியை முடித்துவிட்டு தாயும் மகளும் வீட்டுக்குத் திரும்பி வந்தனர். அப்போது, தங்கள் வீட்டு முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். பதட்டத்துடன் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதனுள்ளே இருந்த இரண்டே கால் பவுன் நகை, வெள்ளி பொருட்கள், 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. பட்டப்பகலில் யாரும் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ஒரு லட்சம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து திண்டிவனம் காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்டோர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி கணேசன் மற்றும் போலீஸார் விசாரணை செய்ததோடு, கைரேகை நிபுணர், உதவி ஆய்வாளர் ஆகியோர் களவுபோன வீட்டில் கொள்ளையடித்துச் சென்றவர்களின் கைரேகை மற்றும் தடையங்களைச் சேகரித்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் திண்டிவனம் நகரத்தில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.