கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ராமாபுரம் கிராமத்துக்கு உட்பட்ட லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பராஜ். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சின்னப்பராஜ், அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகவும், இவரது மனைவி சகாயராணி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையப் பொறுப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்களது மகன்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி சின்னப்பராஜ், தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள தன் மகன்களைப் பார்க்கச் சென்றுள்ளார். இந்தநிலையில், 23ஆம் தேதி அவரது வீட்டின் முன்புறக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், 50 பவுன் நகை, பணம் மற்றும் பித்தளைப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சென்னையிலிருந்து திரும்பிவந்த சின்னப்பராஜ், தன் வீட்டில் கொள்ளை நடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர். நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அந்த வழியாக வந்த, இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில், அவர்கள் வடலூர் அருகே உள்ள கருங்குழி பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் மகன் செந்தில்குமார் மற்றும் திட்டக்குடி அருகிலுள்ள ரெட்டாகுறிச்சி பகுதியைச் சேர்ந்த ராபிக் மகன் சஜீவ் என்பதும் தெரியவந்தது. இதில் செந்தில்குமார், திருப்பூரில் வேலை செய்யும்போது பாளையங் கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டார். பெண்ணுடன் பாளையங்கோட்டையில் தங்கி வாடகைக்கு வாகனங்களை ஓட்டி வந்துள்ளார்.
இவர்களிடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக, அவர் மனைவி தற்கொலை செய்துகொண்டார். மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக செந்தில்குமார் மீது சோழதரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் செந்தில்குமார்.
இந்த நிலையில் ஆசிரியர் சின்னப்பராஜ், அவரது மனைவியும் சென்னை செல்லும் முன் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். அப்போது அருகில் இருந்த அவர்களது உறவினர்களிடம், தான் வெளியூர் செல்ல இருப்பதாகக் கூறி தன்வீட்டின் சாவியைக் கொடுத்துள்ளனர். அதைத் தற்செயலாகக் கவனித்த செந்தில்குமாரும் அவரது நண்பன் சஜிவ் ஆகிய இருவரும் சேர்ந்து திட்டமிட்டு சின்னப்பராஜ் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர்.
இதையடுத்து, பிடிபட்ட 2 பேரையும் ஸ்ரீமுஷ்ணம் காவல் ஆய்வாளர் வினிதா, சப் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து நெக்லஸ், ஆரம், வளையல், செயின் உள்ளிட்ட 22 பவுன் நகைகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திட்டமிட்டுக் கொள்ளையடித்த 2 கொள்ளையர்கள் பிடிபட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களைப் பிடித்த போலீசாருக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.