தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டது கலசப்பாடி மலை கிராமம். முற்றிலும் அடர்வனத்தில் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தின் அருகில் அரசநத்தம், சோலக்காட்டுமேடு, அக்கரைமேடு, தரிசுக்காடு, ஆலமரத்துவலவு, கருக்கம்பட்டி என சிறியதும் பெரியதுமாக 9 மலை கிராமங்கள் உள்ளன. இதில் ஏறத்தாழ 700 குடும்பங்கள் வசிக்கின்றன. 525 குடும்ப அட்டைகள் உள்ளன. 1500 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் மருத்துவம், உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு மலையடிவாரத்தில் உள்ள வாச்சாத்தி கிராமத்துக்கு வந்து பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்கின்றனர்.
நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளாகியும் இதுவரை கலசப்பாடி மற்றும் சுற்றுவட்டார மலை கிராம மக்களுக்கு சாலை வசதி இல்லாத காரணத்தினால் அந்தக் கிராம மக்கள் மலையிலிருந்து 5 கி.மீ. தொலைவு நடைபயணமாக வர வேண்டும். இவர்கள் தங்களுக்கு தார் சாலை வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் கடந்த மக்களவைத் தேர்தலின்போது தங்களது சாலை வசதி கோரிக்கையை முன்வைத்து தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இந்த தகவல் அறிந்த திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் அப்பகுதிக்கே நேரில் சென்று அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தேர்தலுக்கு பின்பு நான் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் உங்களுக்காக நிச்சயம் சாலை அமைத்துத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்தார். இதையடுத்து, மலைவாழ் மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு தேர்தலில் வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து, தர்மபுரி மக்களவை உறுப்பினராக டாக்டர் செந்தில்குமார் வெற்றி பெற்ற பின்பு, முதல் மக்களவை கூட்டத்தொடரிலேயே வாச்சாத்தி- கலசப்பாடி பழங்குடியின மக்களின் நலன்கருதி மலை கிராமத்துக்கு தார் சாலை வசதி வேண்டும் என வலியுறுத்திப் பேசினார். அதோடு மட்டுமல்லாமல், தருமபுரி மாவட்ட ஆட்சியர், மாநில அரசு அதிகாரிகள், மத்திய அரசு வனத்துறை அமைச்சர், அதிகாரிகள் என தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பல முறை சந்தித்து முழுமூச்சாக சாலை வசதி கோரி வலியுறுத்திவந்தார்.
அதனைத் தொடர்ந்து 5 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைக்க 4 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்திலிருந்து கலசப்பாடி மலை கிராமத்துக்கு 5 கிலோமீட்டர் தூரத்திற்கு 6 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்க மத்திய அரசின் வனம் சுற்றுச்சூழல் காலநிலை மாறுபாடு துறை கடந்த 19ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. அந்த ஒப்புதலின் அடிப்படையில் பிரதமரின் தேசிய கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கலசப்பாடி மலைவாழ் பழங்குடியின மக்களின் பல ஆண்டுக்கால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.