திருப்போரூர் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தில் அமைக்கப்படும் துணைக்கோள் நகரத்துக்குச் செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் உள்ள திருவிடந்தை என்னும் கிராமத்தில், 160 ஏக்கர் பரப்பில் உலகத் தரம் வாய்ந்த துணைக்கோள் நகரம் அமைக்க அரிஹந்த் ஹோம்ஸ் என்ற தனியார் நிறுவனம் அந்தப் பகுதியில் உள்ள கோவில் நிலம் மட்டுமல்லாமல், திருவாழி குட்டை மற்றும் அம்பாள் ஏரிக்களுக்கிடையே 60 அடி அகலத்தில் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுவருகிறது.
இதற்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவிற்குத் தடை விதிக்க வேண்டும் என அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் சுந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், கோவில் நிலம் மற்றும் நீர்நிலைகளைத் தங்களுக்கு சொந்தம் எனக்கூறி தனியார் நிறுவனம் சாலை அமைக்க அனுமதி பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.
நீர் நிலைகளை வணிகப் பயன்பாட்டிற்கு மாற்றக்கூடாது என்பதைக் கவனித்தில் கொள்ளாமல் அதிகாரிகள் அதற்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஏரி மற்றும் கோவில் நிலத்தில் சாலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அந்தப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி தமிழ்ச் செல்வி அடங்கிய அமர்வு, ஏரிகள் மீது சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டது.