தொடர் மழையால் சேலம் மூக்கனேரி நிரம்பியதை அடுத்து, அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அப்பகுதிகளை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டார்.
சேலம் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. மேலும், ஏற்காடு மலைப்பகுதியிலும் வரலாறு காணாத வகையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மலைப்பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தால், சேர்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மூக்கனேரி நிரம்பி வழிகிறது.
தொடர்ந்து ஏரிக்கு நீர் வரத்து இருந்து வரும் நிலையில், அதிலிருந்து வெளியேறும் உபரி நீர், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாலும், சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதாலும் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் மேயர் ராமச்சந்திரன், பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை திங்கள்கிழமை (செப். 6) நேரில் சென்று பார்வையிட்டார். மாநகராட்சி அலுவலர்களும் உடன் சென்றனர்.
ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லாதவாறு, திருமணிமுத்தாற்றுக்கு திருப்பி விடுவதற்கான சீரமைப்பு பணிகளை மேயர் முடுக்கி விட்டார். பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பிரத்யேக நீர்வழித்தடங்கள் ஏற்படுத்தி, ஏரியின் உபரிநீர் திருமணிமுத்தாற்றில் கலக்கும்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.