தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனாவால் அதிகம் பாதிப்படைந்துள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், தற்போது வேலூர் மாவட்ட நிர்வாகம் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்ற ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வேலூரில் காய்கறி, மளிகை கடைகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மட்டுமே செயல்படும். அதேபோல் துணிக் கடைகள், நகைக் கடைகள் ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயங்கும். இறைச்சி கடைகள் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்கும். மொத்த வியாபாரம் செய்யும் மளிகை, அரிசி கடைகள் திங்கள், புதன், வெள்ளி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இயங்கும். மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள், உழவர் சந்தை ஆகியவை தினசரி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.