கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் உள்ளது தகடி கிராமம். ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்த கிராமத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அப்பகுதியில் பள்ளிக்கூடம், குடியிருப்புப் பகுதிகள் உள்ளதால் அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகளை, பெண்களை டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வருபவர்கள் கேலியும், கிண்டலும் பேசி வருகின்றனர்.
இதனால் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள், போலீசில் பலமுறை புகார் அளித்தும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் மனு கொடுத்தும் அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் தகடி கிராமத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள், அங்குள்ள டாஸ்மாக் கடையினால் தொல்லைகள், பிரச்சனைகள் எனவும் அதனால் அந்த கடையை அகற்ற கோரியும் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ. கார்த்திகேயன், பொதுமக்களுடன் சென்று டாஸ்மாக் கடையை திடீரென்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இத்தகவலறிந்த திருக்கோவிலூர் டி.எஸ்.பி. ராஜி, தாசில்தார் சிவசங்கரன், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. கார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளுக்கும் எம்.எல்.ஏ.வுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
சம்பவம் சீரியஸாக போனதைத் தொடர்ந்து, அங்கிருந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் மூலம் தகவல் தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகள் டாஸ்மாக் கடை இனிமேல் இங்கு இயங்காது என எம்.எல்.ஏ.விடும் பொதுமக்கள் முன்னிலையில் உறுதியளித்ததோடு கடையையும் உடனே மூடிவிட்டனர். பல நாள் கோரிக்கையை ஒரே நாள் போராட்டத்தின் மூலம் எம்.எல்.ஏ. தலைமையில் அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் சாதித்துள்ளது அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.