கரோனா தொற்று அதிகம் பாதிப்புள்ள 6 மாநிலங்களின் முதல்வர்களுடன் இன்று காணொளிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.
இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பெருதொற்றை சமாளிக்க கடினமான பணியை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்த ஒரே பெரிய மாநிலம் தமிழகம் தான். எனது அரசு இச்சவாலை எதிர்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இறப்புகளும் குறைந்துள்ளன.
தடுப்பூசிகள் வீணாக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்துள்ள போதும், ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது, தொற்று பரவலுக்கு வழி வகுத்துவிடலாம். எனவே, இந்த முடிவை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.