சென்னை அண்ணா நகரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் நேபாளத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பலை ஹைதராபாத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஞானப்பிரகாசத்திற்கு சொந்தமான வீடு ஒன்று சென்னை அண்ணா நகரில் இருக்கிறது. மதுரவாயலில் குடும்பத்துடன் தங்கி இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி வாரத்திற்கு ஒருமுறை சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டிற்கு வந்து பராமரித்து விட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி வீட்டினுடைய கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்க்கையில் வீட்டிலிருந்த தங்கநகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அருகிலிருந்த வீடுகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது தொடர்ந்து மூன்று நாட்களாக வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் சிலர் வந்து சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.
கடந்த 22 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் 5 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அப்பொழுது வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா இணைப்புகளைத் துண்டித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா இல்லாததை சாதகமாக்கிக் கொண்டு மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்று மது அருந்தி விட்டு ஒருநாள் அங்கேயே தங்கி இருந்துள்ளனர். அதேபோல் 24ஆம் தேதியும் வீட்டிற்கு வந்து சில பொருட்களை திருடி சென்றுள்ளனர். ஆனால் அருகில் இருந்த குடியிருப்புகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொள்ளையடித்த கும்பலை தேடி வந்தனர். கொள்ளையடித்த நபர்களில் ஒருவர் சைக்கிள் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த சைக்கிள் சென்ற இடத்தை சிசிடிவி காட்சிகள் மூலம் பின் தொடர்ந்து செனாய் நகரில் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு பூபேந்திரா என்ற நபரை பிடித்து விசாரித்ததில் மொத்தமாக நான்கு பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. நேபாள நாட்டைச் சேர்ந்த கணேஷ், பூபேந்திரா, சந்தோஷ் பட்ராய், லாலு ஆகிய நான்கு ஆகியோர் கைது செய்யப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொள்ளையில் சம்பந்தமுடைய மேலும் 2 பேரை ஹைதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.