தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்ததையடுத்து, ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து, அமல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு. சில மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று உயரத் தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பாதிப்பு அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் மேலும் சில கட்டுப்பாடுகளை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கோவை, திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில் இரவு 09.00 மணி வரை கடைகள் திறந்து இருக்க அனுமதி வழங்கப்பட்டதைக் குறைத்து, மாலை 06.00 மணியோடு கடைகள் அடைக்கப்படவேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன. அதேபோல், அடுத்தடுத்து சில மாவட்ட நிர்வாகங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திலும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், கரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டு திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களில் மாலை 06.00 மணியோடு கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 16- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25- ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் எனச் சொல்லப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 16- ஆம் தேதி திருவண்ணாமலை நகரத்தில் காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாலை 06.30 மணிக்கே நகரத்தில் பரபரப்பு குறைந்து வெறிச்சோடியது.
அதேநேரத்தில் திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இந்த தடை உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டுள்ளனர், அதனால் காவல்துறை இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிற வேண்டுகோள் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.