நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உலகெங்கும் வாழும் தமிழ்த்தேசிய மக்கள் சாதி, மதம் கடந்து கொண்டாடும் பெருவிழாவாகத் தொன்றுதொட்டு இன்றுவரைத் திகழ்கிறது பொங்கல். அப்பொங்கலைப் பற்றிய செய்திகளைச் சங்க இலங்கியங்களும் பகர்கின்றன. “பொங்கல் இள மழை புடைக்கும் நாட” என ஐங்குறுநூறும், “பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி” என பதிற்றுப்பத்தும், “போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்” என்றும் “பெய்து புலந்து இறந்த பொங்கல் வெண் மழை” என அகநானூறும், “பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை” என நெடுநல்வாடையும் சிறப்பித்துக் கூறுகின்றன.
இத்தகையப் பெருமிதமிக்க தமிழர் திருநாளில் இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்கவும் மண்வளம், மொழிவளம், நீர்வளம், நிலவளம், கான்வளம், மலைவளம் போன்ற இயற்கை வளங்களைக் காக்கவும், உழவுத் தொழிலை உயர்த்தவும், இயற்கை வேளாண்மையை மீட்கவும், உழவர் பெருமக்களை வாழ்விக்கவும். தற்சார்பு பொருளியலை நிலைநிறுத்தவும் இந்நாளில் உறுதியேற்போம். மேலும் இயற்கையின் பேரிடர்களால் வாழ்விழந்து நிற்கும் அனைத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், மருத்துவமும் கல்வியும் அனைத்து மக்களுக்கும் கட்டணமின்றி வழங்கவும், அதற்கான அரசை நிறுவ உழைத்துக் கொண்டிருக்கும் நாம்தமிழர் கட்சியின் சார்பில் உலகுவாழ் உயிர்க்கினிய தமிழ்ப் பேரினத்தினத்தின் உறவுகளுக்கு என் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.