ரஜினி அரசியல் தலைவர் அல்ல என தமிழக முதல்வர் தெரிவித்தது சரிதான் எனவும், ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளதாக தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெறப்படுவதை கோவை பாஜக அலுவலகத்தில் துவக்கிவைத்த வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
சபரிமலை விவகாரத்தில் அதன் பாரம்பரியத்தை கடைபிடிக்க பெண்கள் அனுமதிக்க வேண்டும் எனவும் பெண்கள் இதை புரிந்துகொண்டு கோயிலின் புனிதத்தை காக்க வேண்டும் என்று கூறினார். பாஜக தமிழகத்தில் புதிய உத்வேகம் பெற்றுள்ளதாகவும், பாஜகவில் ரஜினி இணைவது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறிய அவர், ரஜினி அரசியல் தலைவர் அல்ல என தமிழக முதல்வர் தெரிவித்தது சரிதான் எனவும், ஜெயலலிதா கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளதாக தெரிவித்தார். மேலும், கல்லூரி மாணவ, மாணவியரின் தற்கொலை சம்பவங்கள் சமுதாய மற்றும் அரசியல் சூழலுக்கு உகந்ததல்ல என்றும் உடல் நல பாதுகாப்பு போல மனநலத்தையும் பாதுகாக்க கல்வி நிறுவனங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கோவையில் கட்சி கொடிக்கம்பம் சரிந்து விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்த அவர், பரபரப்பாக பார்க்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் வழக்கில் இருந்து தப்பிக்க வழியில்லை எனவும் தமிழக அரசு அந்த வழக்கில் கவனமாக இருக்க வேண்டும் என கூறினார்.