கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தொடர்ந்து நடைபெற்ற நிலையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் இரண்டு நாட்களுக்கு முன் வழங்கினார். அதில், "ஜூலை 11-ஆம் தேதி அன்று எடப்பாடி பழனிசாமி நடத்திய அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் செல்லாது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். ஜூன் 23-ல் நடந்த பொதுக்குழுவுக்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே இணைந்து செயல்பட பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். ஆனால், அந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.யும், பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவீந்திரநாத் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “அனைவரும் ஒன்றாக செல்ல வேண்டும் என்பது கட்சியினருடைய எண்ணமாக உள்ளது. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஓபிஎஸ் தன்னுடைய ஆவலை வெளிப்படுத்தியுள்ளார். திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று அவர் நினைக்கிறார். எடப்பாடியின் வளர்ச்சிக்கு அவரது உழைப்பே காரணம். அதை நான் வரவேற்கிறேன். இந்த விவகாரத்தில் கட்சியினரின் எண்ணத்துக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்” என்றார்.