பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணியாற்றும் சப்ரிஜிஸ்டர்கள் எனப்படுகிற சார்பதிவாளர்களின் தமிழ்நாடு அளவிலான சார்பதிவாளர் சங்கத்தின் கோவை-சேலம் மண்டலக் கூட்டம் ஈரோட்டில் 11ந் தேதி நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் மகேஷ் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மணிராஜ் முன்னிலை வகித்தார்.
அந்தக் கூட்டத்தில், “ரியல் எஸ்டேட் மற்றும் ப்ரொமோட்டர்கள் அல்லாத அப்பாவி ஏழை மக்கள், குறைந்த அளவில் நிலம் வைத்துள்ளவர்கள் அவர்களது சொத்துக்களை எவ்வித சிரமமும் இன்றி மனைகளாகப் பிரித்து பரிமாற்றம் செய்து விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். லட்சக்கணக்கான ஏழை இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருவதால் ஏற்கனவே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
தற்காலிக பணிநீக்கத்தில் உள்ள சார்பதிவாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற துறைகள் வழங்கும் சான்றுகளின் மெய்த்தன்மை கேட்டு மக்களை அலைக்கழிக்கக் கூடாது. ஆவணம் பதிவு செய்யும் போது சான்றிதழ் தவறு ஏற்பட்டு இருப்பின் சார்பதிவாளர்களைப் பொறுப்பாக்குவதைக் கைவிட வேண்டும். சார்பதிவாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும்." என்கிற கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
மேலும், கூட்டத்தில் ஆவணப் பதிவு செய்வதில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க சார்பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இறுதியாக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி கொடுத்த சார்பதிவாளர்கள் மற்றும் பதிவுத்துறை பணியாளர்களுக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், சங்க மாநிலப் பொருளாளர் கார்த்திகேயன், துணைத் தலைவா்கள் ஸ்ரீராம், தமிழ்செல்வன், இணைச் செயலாளர் கோபிதமிழ்செல்வி, அமைப்புச் செயலாளர் இளம்பரிதி மற்றும் கோவை-சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சார்பதிவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.