மலையேற்றத்தை ஒழுங்கு படுத்தவும், வனப்பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தவும் வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்காக சென்றவர்களில் 9 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்களில் 6 பேர் சென்னையையும், 3 பேர் ஈரோட்டையும் சேர்ந்தவர்கள் ஆவர். உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மலையேற்றப் பயிற்சிக்காக சென்றிருந்த 36 பேரில் உயிரிழந்த 9 பேர் தவிர மீதமுள்ள 27 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேருக்கு எந்தக் காயமும் இல்லை என்பதால் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு மதுரை மற்றும் தேனி மருத்துவக் கல்லூரிகளில் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். அவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் விரைவில் நலம் பெற விரும்புகிறேன். தீ விபத்து குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகமும், கமாண்டோ படையினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினரும் உடனடியாக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டனர். அவர்களின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவையாகும். ஆனாலும், மலையேற்றக் குழுவினரில் ஒரு பிரிவினர் காட்டுத் தீயின் நடுவில் சிக்கிக் கொண்டதால் 9 பேரைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. அவர்களின் இறப்பு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மலையேற்றத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் தான் அனைத்துக்கும் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. வழக்கமாக பிப்ரவரி முதல் கோடைக்காலம் முடியும் வரையிலான காலத்தில் காட்டுத் தீ வேகமாக பரவுவதற்கு வாய்ப்புள்ளதால், இந்தக் காலம் மலையேற்றப் பயிற்சிக்கு ஏற்றதல்ல என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பழக்கமில்லாத மலைப்பகுதியில் மலையேற்றத்திற்கு செல்லும் போது வனத்துறையினரிடம் அனுமதி வாங்கி, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை வழிகாட்டியாக அழைத்துச் செல்ல வேண்டும்; அவர்கள் இல்லாவிட்டால் வனத்துறை பணியாளர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால், இதை மலையேற்ற நிறுவனம் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை பழங்குடியினரோ, வனத்துறை ஊழியர்களோ துணைக்கு சென்றிருந்தால் 36 பேரையும் பாதுகாப்பான வழிகளில் பத்திரமாக அழைத்து வந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
குரங்கணி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காட்டுத் தீ எரிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் மலையேற்றக் குழுவினர் மலையேற்றப் பயிற்சிக்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள் என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை. வனத்துறையிலும் போதிய எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லாததால் வனப்பகுதிகளில் முழுமையான சுற்றுக்காவல் பணியில் ஈடுபட முடியவில்லை என்று அத்துறை அதிகாரிகள் கூறும் போதிலும் அந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல.
சாகசம் படைக்கும் நோக்குடன் சென்ற மாணவர்களும், இளைஞர்களும் சடலமாக திரும்புவது சகித்துக் கொள்ள முடியாத சோகமாகும். இனியாவது இத்தகைய சோக நிகழ்வுகள் நடக்கக் கூடாது என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு மலையேற்றத்தை ஒழுங்கு படுத்தவும், வனப்பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.