Skip to main content

கொரோனாவுக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க கோரிக்கை! - ஏற்க மறுத்த நீதிமன்றம்!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

கொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த மருத்துவ அறிவுறுத்தல்களை பள்ளி செல்லும் குழந்தைகளால் பின்பற்ற முடியாது என்பதால், தமிழகத்தில் உள்ள நர்சரி முதல் உயர்நிலைப் பள்ளிகள் வரை விடுமுறை அறிவிக்கும்படி உத்தரவிடக் கோரி, சென்னை மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

 Request to declare holidays to schools for Corona! - High Court refusing to accept!


அந்த மனுவில், குழந்தைகளையும் வயதானவர்களையும் இந்த நோய் எளிதில் தாக்குகிறது என்பதால், குழந்தைகளைப் பாதுகாக்க தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 2019 - 20 ம் கல்வியாண்டு முடிவடையும் நிலையில் உள்ளதால், விடுமுறை அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், எந்தப் பள்ளியிலும், மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இதை ஏற்ற நீதிபதிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட மறுத்து விட்டனர். அதேசமயம், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளைத் தொடரும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்