Skip to main content

சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய விவசாயிகள் கைது

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
ai

 

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் மற்றும் மீனவர் பேரவையினர் கடலூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய அணி சார்பில் மாநில துணை செயலாளர் இந்திரஜித் விடுதலை, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் பிரகாஷ் சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி சார்பில் பசுமை வளவன் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவீந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு ராமச்சந்திரன் மாவட்ட குழு கற்பனைச் செல்வம் வாஞ்சிநாதன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

 விவசாயிகளின் நிலங்களை பாலைவனமாக்கி நிலத்தடி நீரை சீரழித்து கடற்கரை மக்கள் வசிக்கும் பகுதியை பாலைவனமாக்கி அரசே பொதுமக்களை காலி செய்யும் போக்கைக் கைவிட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் சாகர்மாலா திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், நாகை,  கடலூர் மாவட்டத்தை பாதுகாத்திட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் மேற்கண்ட கோரிக்கைகளை  சார் ஆட்சியர் விசு மகாஜன் சந்தித்து விவசாயிகள் மனு கொடுத்தனர். முற்றுகையில் ஈடுபட்ட அனைத்து விவசாய சங்கத்தினர் மற்றும் தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்