Skip to main content

ஆந்திர போலீசாரை சுற்றி வளைத்த மக்கள்: திண்டிவனம் அருகே பரபரப்பு

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

 


திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரகமத்துல்லா. இவர் சந்தைமேட்டில் நெல் வியாபாரம் செய்து வருகிறார்.
 

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், சென்னூர் டவுன், கடம் வீரபிரம்மையா என்பவரிடம் ரூபாய் 12 லட்சத்துக்கு நெல் கொள்முதல் செய்திருந்தார் ரகமத்துல்லா. அதற்கு உண்டான பணத்தில் ரூபாய் மூன்று லட்சத்தை மட்டும் ரகுமத்துல்லா கொடுத்துள்ளதாக சென்னூர் டவுன் போலீசில் கடம் வீரபிரம்மையா புகார் அளித்ததின் பேரில் ஆந்திர போலீசாரான ராம நரசிம்மலு மற்றும் வெங்கட்ரமனா ஆகிய இருவர் துணையுடன் மொத்தம் 9 பேர் திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் உள்ள ரகமத்துல்லா வீட்டிற்கு காரில் வந்துள்ளனர். 


  Tindivanam


இவர்கள் அனைவரும் ரகமத்துல்லா வீட்டில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவரை சட்டையைப் பிடித்து அடித்து இழுத்து சென்று காரில் ஏற்றினர். உடனே அந்த கும்பல் ரகமத்துல்லாவை தாக்கியதை அடுத்து சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு அந்த 9 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் அவர்களைத் தாக்க முற்படும் சூழல் ஏற்பட்டது. 


அப்போது ஆந்திர போலீசார் நாங்கள் ஆந்திரா போலீஸ் என்று கூறியுள்ளனர். உடனே பொது மக்கள் அவர்களிடம் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து உறுதி செய்தவுடன் ரோசனை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

 

Tindivanam

 இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் 9 பேரையும் பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் கொடுக்கல் வாங்கலில் இரு தரப்பினரும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். எனவே இரு தரப்பு கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட தகவல்கள் தெரிந்த திண்டிவனம் லோடு ஏற்றி வந்தலாரி டிரைவரை அழைத்து வர போலிசார் அறிவுறுத்தியதுடன் அவர்கள் வந்த இரு கார்களில் ஒன்றை போலீசார் தங்கள் வசம் வைத்துக் கொண்டு ஒரு காரை மட்டும் கொடுத்து அனுப்பி நாளை அந்த லாரி  டிரைவருடன் காவல் நிலையத்திற்கு வர வேண்டும். அப்பொழுது விசாரணையை நடத்தி கொள்ளலாம் என்று அனுப்பி வைத்தனர்.

 

Tindivanam



இதனை தொடர்ந்து அவர்கள் 9 பேரும் திரும்பிச் சென்றுள்ளனர். வெளி மாநிலத்திலிருந்து போலீசார் வேறொரு மாநிலத்திற்கு விசாரணைக்காக செல்லும் போது அப்பகுதி போலீசாரிடம் தகவல் அளித்து, அதன் பின்னர் அவர்கள் உதவியுடன் செல்வதே நடைமுறை. ஆனால் இவர்கள் அந்த நபரை உள்ளூர் போலீசாரிடம் தகவல் அளிக்காமல் அழைத்துச் செல்லும் நோக்கத்தில் அங்கு சென்றதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதேபோன்று அப்பகுதியில் ஒரு நபரை கடத்திச் சென்று அவரிடம் வட்டிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை வசூல் செய்த பின்னரே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 

 கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக ஆந்திர போலீசார் உதவியுடன் ஒருவரை கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்