நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரிப் பக்கம் உள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மூன்று மகன்களில் ஒருவர் நம்பிராஜன் (21) நம்பிராஜன் உட்பட குடும்பமே கூலித் தொழிலில் உள்ளது. அதில் நம்பிராஜன் அடுத்த தெருவிலுள்ள கூலித் தொழிலாளியான தங்கப்பாண்டி என்பவரின் மகளான வான்மதியோடு (18) பழகியதில் அதில் நெருக்கமான காதலனார்கள். இரண்டு குடும்பங்களும் ஓரே சமூகம், ஓரே ரேஞ்ச்சில் இருப்பவை. அதே சமயம் நம்பிராஜன் வான்மதியின் அண்ணன் செல்லச்சாமியும் நண்பர்கள். இருவருமே விவகாரத்தில் தாட்டியமானவர்கள். அதில் நம்பிராஜன் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள். போலீசின் ஆவணப்படி அவர் பெயர் ரவுடிப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
ஒரே சமூகம் என்பதால் நம்பிராஜனின் குடும்பத்தார்கள் அவனின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆதரவு கொடுத்தனர். அதே சமயம் வான்மதியின் தந்தை தங்கப்பாண்டி எதிர்த்திருக்கிறார். விவகாரத்தை நாங்குநேரிக் காவல் நிலையம் வரை கொண்டு செல்ல, காதலர்களை விசாரித்த போலீசாரிடம், தான் விருப்பப்பட்டே நம்பிராஜனைக் காதலிப்பதாகவும் அவரையே திருமணம் முடிக்கப் போவதாக சொல்ல, மனமொத்த காதலர்கள் என்பதால் போலீசார் சட்டபடி புகார் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் காதலர்கள் திடீரென்று ஊரை விட்டுத் தலைமறைவானார்கள். மேலும் வான்மதிக்கு 18 வயது ஆகவில்லை. அவர் மைனர். சட்டப்படி திருமணம் செய்ய இயலாது என்பதால் நம்பிராஜன் தன் காதலி வான்மதியைத் தலைமறைவாக வேறு ஊரில் தங்க வைத்து அவருக்கு நான்கே மாதத்தில் 18 வயது ஆனதும், அவரை முறைப்படி திருமணம் செய்து நெல்லை டவுனில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்தோடு தங்கி வாழ்க்கையை நகர்த்தியுள்ளனர்.
இதனிடையே வான்மதியின் அண்ணன் செல்லச்சாமியும் மாஞ்சாங்குளத்திலுள்ள தனது சமூகத்தைச் சார்ந்த பெண்ணைக் காதலித்து எதிர்ப்பையும் மீறி அவரை திருமணம் செய்தவர். இந்தச் சூழலில் நாங்குநேரியில் உள்ள துக்க வீட்டிற்கு வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி தன் நண்பர்களுடன் வந்திருக்கிறார். அது சமயம் அவர்களனைவரும் செம போதையிலிருக்கிறார்கள். அந்நேரம் பார்த்து சக நண்பர்கள்.
உன் தங்கை காதலித்து ஓடிப்போனவர் என்று சகாக்கள் செல்லச்சாமியை உசுப்பேற்றியிருக்கிறார்கள். இதனால் செல்லச்சாமி ரௌத்திரமாகியிருக்கிறார். மப்புக் குறையாமல் அதே சூட்டில் நண்பர்களோடு திட்டம் போட்டிருக்கிறார். ப்ளான் படி நேற்று முன் தினம் இரவு டவுணில் உள்ள நம்பிராஜனின் வீட்டிற்கு வந்த அவனது நண்பன் முத்துப்பாண்டி அவரை மதுக் குடிக்க அழைத்திருக்கிறார். அவனை தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு முத்துப்பாண்டி, குறுக்குத்துறை ரயில்வே கேட் பக்கம் அழைத்துச் சென்றார் . அங்கே நண்பர்கள் மது அருந்திய நேரத்தில், புதரில் மறைந்திருந்த கும்பல் ஒன்று நொடியில் நம்பிராஜனைச் சூழ்ந்து கொண்டு வெறித்தனமாக வெட்டியது. நம்பிராஜனின் தலையைத் துண்டாக்கியது. நம்பிராஜனின் உடலை இழுத்துச் சென்று ரயில்வே டிராக்கில் போட்டு, ரயில் மோதி இறந்துவிட்டடதாக செட்டப் செய்து விட்டு மறைந்திருக்கிறது அந்தக் கும்பல்.
இதனிடையே தன் கணவன் இரவாகியும், வீடு திரும்பாததைக் கண்டு பதறிய வான்மதி டவுண் போலீசில் புகார் செய்திருக்கிறார். அதோடு தனது திருமணம் நடந்தது உள்ளிட்ட விபரங்களை வான்மதி போலீசாரிடம் தெரிவிக்க விசாரணையின் மூலம் ரயில்வே டிராக்கில் கிடந்த நம்பிராஜனின் உடலைக் கைப்பற்றியிருக்கிறார்கள். ஸ்பாட்டிற்கு வந்த நெல்லை மாநகர டி.சி.சரவணன் முழு விசாரணையை மேற் கொண்டிருக்கிறார் அதனடிப்படையில் 5 பேரைக் கைது செய்திருக்கிறார்.
வேண்டாத வெறித்தனத்தில் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள். செல்லச்சாமி உள்பட அவனுடன் ஐந்து பேரைக் கைது செய்திருக்கிறோம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்று நம்மிடம் சொன்னார் டி.சி.சரவணன்.