Skip to main content

“கல்வித் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலரை நீக்குக” - ஜவாஹிருல்லா போர்க்கொடி ! 

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

"Remove the Chief Executive Officer of Educational Television" - Jawahirullah

 

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதன்மை செயல் அதிகாரியாக மணிகண்ட பூபதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அடிப்படையில் இவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதால், இவரது நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தெரியாமல் இந்த நியமனம் நடந்ததா? என்றெல்லாம் சர்ச்சைகள் வெடித்தபடி இறுக்கின்றன. இந்த நிலையில், இந்த நியமனத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார். 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளி மாணவர்களுக்காக தொலைக்காட்சி வழியே கல்வியை அளிப்பதற்குத் தொடங்கப்பட்ட கல்வித் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு முதன்மை செயல் அலுவலராக (சிஇஓ) மணிகண்ட பூபதி என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு நியமனம் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில், வலதுசாரி சிந்தனைகொண்ட ஒருவரை மாணவர்களுக்குக் கல்வி அறிவூட்டும் தொலைக்காட்சிக்கு முதன்மை செயல் அலுவலராக நியமனம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சமூகநீதி மற்றும் சமத்துவத்தில் அக்கறையும் ஆர்வமும் கொண்ட பல கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட  தகுதிமிக்க ஆளுமைகள் தமிழகத்தில்  உள்ளபோது தொடர்ந்து சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராகக் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பும் ஊடகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய ஒருவரைக் கல்வித் தொலைக்காட்சிக்கு முக்கிய அதிகாரியாக நியமித்திருப்பது ஏற்புடையது அல்ல.

 

சமூக நீதியையும் சமூக நல்லிணக்கத்தையும் இலட்சியமாக கொண்டு செயல்படும் திமுக அரசிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படும் ஒருவர் வளரும் தலைமுறையினர் உள்ளத்தில் திராவிட கொள்கைக்கு எதிரான மனப்பான்மையை ஏற்படுத்த கூடும். எனவே, தமிழக அரசு மணிகண்ட பூபதியின் நியமனத்தை ரத்து  செய்து கல்வி மற்றும் ஊடகத்துறையில் தகுதியுள்ள வேறுஒரு வல்லுநரை நியமனம் செய்ய வேண்டும்"  என்று வலியுறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

 

 

சார்ந்த செய்திகள்