அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம், வேலைக்கு பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 'தற்போது அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளார். செந்தில் பாலாஜி இனியும் அமைச்சராக நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது உள்ள கிரிமினல் வழக்கு தொடர்பாக நீதிமன்ற காவலில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.